Rock Fort Times
Online News

23ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி- விழாக்கோலம் காண்கிறது மதுரை…!

மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகும். அதன்படி, இந்த ஆண்டு வருகிற 23ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். நேற்றைய தினம் (19-ம் தேதி) மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இன்று திக் விஜயமும், 21-ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

இதற்கிடையே வருகின்ற 21-ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். 22-ஆம் தேதி மூன்று மாவடி அருகே பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் நடக்கிறது. இதில், மதுரை மட்டுமன்றி பிற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே வைகையாற்றில் எழுந்தருள்வார் என்பதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது வைகையாற்றில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தால் இன்று 20-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்