Rock Fort Times
Online News

தமிழகத்துக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்யும் ஸ்டாலினுக்கு வருகிற தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி…!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவிற்கு குறுகிய காலமே உள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை சேர்ந்த
40 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: அ.தி.மு.க. தலைமையிலும், தி.மு.க., தலைமையிலும், பா.ஜ., தலைமையிலும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் போட்டி என்று வரும்போது, அ.தி.மு.க.,வா தி.மு.க.,வா என்பதை இந்த நாடு அறியும். நாட்டு மக்கள் அறிவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு, மக்கள் ஆதரவோடு அ.தி.மு.கவுடன் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 3 நாட்களாக நடக்கும் கூட்டங்களில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வையும் என்னை பற்றியும் விமர்சிக்கிறார். வேறு எதுவும் பேசுவதில்லை. சரக்கு இருந்தால் தானே பேசமுடியும். ஒன்றுமே இல்லையே! பொம்மை முதல்வரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தமிழகத்தை குட்டிச்சுவராக்கி கெடுத்து விட்டோம் என்கிறார்.

எம்.ஜி.ஆர்., இந்த மண்ணில் பிறந்த காரணத்தால் தமிழகம் தப்பியது. உங்கள் குடும்பத்திடம் இருந்து தப்பிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்., அதை காத்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்தோம். அதனால், இன்றைக்கும் அ.தி.மு.க. ஆட்சியை பொற்கால ஆட்சி என்கின்றனர். மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சி அலங்கோல ஆட்சி; மக்கள் விரோத ஆட்சியாகத் தான் மக்கள் பார்க்கின்றனர். மூன்று ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். 6 சட்டக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. வேளாண்மை, கால்நடை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்து, தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக்கி இருக்கிறோம். உங்களது மூன்றாண்டு கால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வர முடிந்ததா? முதல்வராக இருந்த ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது. உதயநிதி, மூன்று ஆண்டுகளாக, ஒரு செங்கல்லைத் தான் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். வெளியே காட்டி பிரயோஜனம் இல்லை.நீட் தேர்வை யார் கொண்டு வந்தது. நீயும் மைக் பிடி, நானும் மைக் பிடிக்கிறேன் பேசு. யாருடைய ஆட்சியில் கொண்டு வந்தது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. 2010 டிசம்பர் 21ம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் அரசிதழில் வெளியிடுகின்றனர். நாமக்கல் காந்தி செல்வன் இணை அமைச்சராக இருக்கும்போது, கொண்டு வந்தது தி.மு.க., தான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மாறி மாறி பொய்யை பேசி மக்களை ஏமாற்றும் கட்சி, திராவிட மாடல் என்று சொல்லும் தி.மு.க. கட்சி. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு மருத்துவக் கல்லுாரிகளில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. அரசு. 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள் 2160 பேர் மருத்துவம் படிக்கின்றனர். இது தான் எங்கள் சாதனை. நாங்கள் மக்களுக்கு சேவை செய்திருக்கிறோம், நன்மை செய்திருக்கிறோம். சாதனைகளை படைத்த அரசை பார்த்து, 10 ஆண்டுகளாக கெடுத்து விட்டதாக வாய் கூசாமல் சொல்கிறீர்கள். மக்களுக்கான ஒரு சாதனையையாவது உங்களால் சொல்ல முடியுமா? குடும்ப கட்சி, கார்பரேட் கம்பெனியில் இருப்பவர்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து அங்கேயும் கொள்ளையடிக்க வேண்டும். இங்கேயும் கொள்ளையடிக்க வேண்டும். அதற்காகத் தான், இவ்வளவு கஷ்டப்பட்டு ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டாவில் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி விட்டன. அந்த காலக்கட்டத்தில் இண்டியா கூட்டணி அமைத்து, பெங்களூருவில் முதல் கூட்டம் நடக்கிறது. அதில், பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா முதல்வரிடமோ, அமைச்சரிடமோ தண்ணீர் திறந்து விடுங்கள், என்று வேண்டுகோள் வைக்கவில்லை. அவருக்கு அதிகாரம் தான் முக்கியம். நாட்டு மக்கள் முக்கியமல்ல. அதனால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி வீணாகி விட்டது . பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் கொடுக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியையும் முழுமையாக கொடுக்கவில்லை. ஸ்டாலின் அமைச்சராக இருந்த போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்து, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம். நாங்களா தமிழகத்தை கெடுத்தோம்.
தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் துரோகம் செய்யும் ஸ்டாலினுக்கு வரும் லோக்சபா தேர்தலில், தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். 2014ல், நதிநீர் பிரச்னைக்காக, தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காக, 37 அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஒன்று சேர்ந்து, 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் நிலையை ஏற்படுத்தினர். அந்த அழுத்தத்தால் தான் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் மேலாண்மை குழுவை மத்திய அரசு அமைத்தது. தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறியதற்கு தி.மு.க.,வும், தி.மு.க., நிர்வாகிகளும் தான் காரணம். தி.மு.க.,வில் 686 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளனர். நீங்கள் ஊழலை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். 2026ல் அ.தி.மு.க., ஆட்சி மலரும். அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவதாக மிரட்டி எங்களை பணிய வைக்க முடியாது. நான் நினைத்திருந்தால், 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த போது, எத்தனை வழக்கு போட்டிருக்க முடியும். இப்போது, அத்தனை ஊழல்களையும் சேகரித்து வைத்துள்ளேன். 2026ல் ஆட்சிக்கு வரும் போது பாருங்கள். அ.தி.மு.க.,வை பொருத்தவரை, மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இந்த தேர்தலோடு தி.மு.க., என்ற கட்சி காற்றோடு கரைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி , எஸ் டி பி ஐ கட்சியினர், திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ப. குமார், ஜெ.சீனிவாசன் பரஞ்ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்