தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில ஊராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நிர்வாகத்தில் கணவர் தலையீடு என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. காலம் காலமாக அரசு தரப்பில் கண்டிக்கப்பட்டாலும் அந்த நிர்வாக தலையீடு தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. இதே போன்ற ஒரு நிகழ்வு துறையூர் பகுதியில் நடந்துள்ளது. உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த தளுகை ஊராட்சியில் ஊராட்சி தலைவியாக கலைச்செல்வி இருந்து வருகிறார். அவரது கணவர் தலையீடு விஸ்வரூபம் எடுக்கவே அந்த பகுதி மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் குணசேகரன், தலைவி கலைச் செல்விக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .அதன் விவரம் வருமாறு: தளுகை ஊராட்சி தலைவரின் கணவர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நிர்வாக பணியில் தலையிடுவதை கண்டித்தும் ஒன்றியக் குழு கவுன்சிலர் முத்துக்குமார் (மா.கம்யூ) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி கலெக்டர், பெண் தலைவர்கள் ஆய்வு கூட்டத்தில் எக்காரணம் கொண்டும் கணவரை நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆனால், தளுகை ஊராட்சி பெண் தலைவரின் கணவர் நிர்வாக பணியில் தலையிடுவதாக புகார் வந்துள்ளது. இனி தங்கள் கணவர் தலையீடு இருக்கக் கூடாது. தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
