Rock Fort Times
Online News

ரூ.11 ஆயிரம் கோடி நன்கொடை பெற்ற பாஜக! அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்த லாட்டரி மார்டின் ஷாக் தந்த தேர்தல் பத்திர அறிக்கை

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15 ஆம் தேதி ரத்து செய்தது. அத்துடன், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதி வழங்கிய நபர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கும்படியும் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எஸ்பிஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நேற்று (மார்ச்-14) மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1 லட்சம், 10 லட்சம் மற்றும் ஒரு கோடி ஆகிய மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்ற கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதாதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிகபட்சமாக பாஜக 11,562 கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இதேபோல், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பிரமல் எண்டர்பிரைசஸ், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், பிவிஆர், சன் பார்மா, நாட்கோ பார்மா, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வாரி இறைத்தவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேம்பிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அந்நிறுவனம் ரூ.1,368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.966 கோடி, Qwik Supply Chain நிறுவனம் ரூ.410 கோடி வழங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா ரூ.400 கோடி, ஹால்டியா எனர்ஜி நிறுவனம் ரூ.377 கோடி, பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.247 கோடி நிதி வழங்கியுள்ளன. பாகிஸ்தானை சேர்ந்த மின்சார உற்பத்தி நிறுவனமான ”ஹப் பவர்” என்ற நிறுவனமும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நான்காவது நாளில் இந்த நிறுவனம் நன்கொடை வழங்கியிருப்பதாக தேர்தல் பத்திர ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்