Rock Fort Times
Online News

கொதிக்கும் வெந்நீரை மனைவி மீது கணவர் ஊற்ற முயன்றபோது சிறுவன் மீது கொட்டியதில் உயிரிழந்த பரிதாபம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தைச் சேர்ந்த ரூபிணி – வினோத்குமார் தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள். வினோத்குமார் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் இதுதொடர்பாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ரூபிணி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். பின்னர் பெற்றோர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து கடந்த 2 மாதங்களாக இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும்,
வினோத்குமார் மதுப்பழக்கத்தை கைவிடாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி வினோத்குமார் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். எவ்வளவு சொல்லியும் திருந்த மாட்டீர்களா? என்று கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த வினோத்குமார், அடுப்பில் இருந்த கொதிக்கும் வெந்நீரை எடுத்து மனைவி மீது ஊற்ற முயன்றுள்ளார். அப்போது தவறுதலாக அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது இளைய மகன் சுவின் மீது வெந்நீர் கொட்டியது. இதில், சிறுவன் உடல் முழுவதும் வெந்து போனது. வலியால் அலறி துடித்த சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவினுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்து சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், உடலை எடுத்துச் செல்வது யார் என்பது தொடர்பாக கணவன்- மனைவியிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மீண்டும் குழந்தையின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மகாபலிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்