Rock Fort Times
Online News

ஓடும் பேருந்தில் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு- பயணிகள் உயிர் தப்பினர்…

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ( 15.12.2023 ) எடப்பாடிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டிவலசை சேர்ந்த விஜயன் பஸ்சை ஓட்டினார். பேருந்தில் நடத்துனர் கதிர் உட்பட பயணிகள் இருந்தனர். அரியானூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது. சில வினாடிகளில் பேருந்தின் பின்பக்க சக்கரங்களின் அச்சு முறிந்து பின்புற சக்கரங்கள் பேருந்தில் இருந்து தனியாக கழன்று விழுந்தது.
இதனால், பின்பக்க டயர்கள் இல்லாமல் சிறிது தூரம் பேருந்து ஓடியது . பேருந்தின் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். சாலையில் சென்றவர்களும் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது தூரம் பேருந்து சென்ற நிலையில் அதன் டிரைவர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் பேருந்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த, சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்டு பழுது பார்க்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்