Rock Fort Times
Online News

திருச்சி அருகே பரபரப்பு: தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் அம்மனின் தங்கத் தாலி திருட்டு… ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி மாதம் திருத்தேர் உற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது இரண்டு மிகப்பெரிய தேர்களை பக்தர்கள் தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவர். அப்போது மதுரை காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அழகுடன் காட்சியளிப்பார். இந்நிலையில் சுவாமியின் கழுத்தில் 15 பவுன் மதிப்பில் தாலி , கருகமணி, தாலி குண்டு ஆகியவை அணிவிக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல நேற்று ( 12.12.2023 ) கோவில் பூசாரி மருதை பூஜைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு குடும்பத்தினர் சுவாமி முன்பு அமர்ந்து நீண்ட நேரம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். பூசாரி மருதை, மடப்பள்ளிக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது காளியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன தாலி சங்கிலி திருட்டுப் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினரிடம் மருதை தகவல் கொடுத்தார். தகவலின்பேரில், அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.பின்னர், தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கணவன், மனைவி குழந்தையுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்ததும், அவர்கள் அம்மன் தாலியை திருடிவிட்டு காரில் ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் வலைவீசி தேடி  வருகின்றனர். அம்மன் தாலி திருட்டுப் போன சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்