திருச்சி, மதுரை, சென்னை, கோவை ஈரோடு, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளராக மதனும் அவரது மனைவியும் செயல்பட்டனர்.
இந்த நகை கடைகளின் விளம்பர தூதுவராக நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா மற்றும் சைத்ரா ரெட்டி இருந்தனர்.
இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ் மற்றும் வாங்கும் நகைகளுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்க ப்பட்டது.
இதனை நம்பிய அப்பாவி வாடிக்கையாளர்கள் பலரும் பிரணவ் ஜூவல்லரி நகை சீட்டில் சேர்ந்தனர்.
நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு சென்றனர்.
ஆனால், அவர்களுக்கு நகையை வழங்காமல் கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் புதுச்சேரி மற்றும் திருச்சியில் உள்ள அந்த நகைக்கடைகளை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி இது தொடர்பாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அந்தவகையில் ஆயிரகணக்கான வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததால் இந்த நகைக் கடைகளில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று தெரியவந்தது.
புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் திருச்சி மற்றும் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகினர்.
பின்னர் அந்த நகை கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குறைந்த அளவு நகைகள் மட்டுமே இருந்தன.
இதுதொடர்பாக திருச்சி பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.