திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட உள் நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் குவைத், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி விமான நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய முனைய கட்டுமானப் பணிகளை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சியில் ஏற்கனவே உள்ள சர்வதேச விமான நிலைய முனைய கட்டிடத்தின் பரப்பளவு சுமார் 11, 500 சதுர மீட்டர். தற்போது விரிவாக்கம் செய்யப்படும் சர்வதேச விமான நிலைய கட்டிட பரப்பு சுமார் 8 லட்சம் சதுர மீட்டர் ஆகும். விமான நிலையத்தின் ஓடுதள பரப்பளவை மேலும் விரிவாக்கம் செய்ய 350 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதில் சுமார் 150 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி கொடுத்து விட்டது. எஞ்சிய பணிகள் தமிழக அரசின் மூலமாகவும், வருவாய்த்துறை மூலமாகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இலங்கை, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, துபை, சார்ஜா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் நேரடியாக இயக்கப்படுகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கு கூடுதலாக விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தால் ஒரே நேரத்தில் சுமார் 1000 உள்நாட்டு பயணிகளையும், 2,500 வெளிநாட்டு பயணிகளையும் கையாள முடியும். தினசரி 30 விமானங்களை இயக்குவதற்கான வசதியோடு திருச்சி விமான நிலையம் மாற்றப்படுகிறது.
புதிய விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் கடைசியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ திறக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும். திருச்சி- புதுக்கோட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலை இருவழி சாலையாக உள்ளது. அதனை விரைவில் நான்கு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு பிறகு கட்சியின் செல்வாக்கும், ராகுல் காந்தியின் செல்வாக்கும் பெருகி இருக்கிறது. பெரிய மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி, அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி மேலும் விரிவடையும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.