Rock Fort Times
Online News

அத்தை உள்பட 2 பேரை கொலை செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை …

திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு...

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வெங்கடாஜலபுரம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, தனபாப்பு தம்பதியர். தனபாப்புவின் அண்ணன் ராமசாமி. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான அவருக்கு சகோதரி தனபாப்பு தேர்தல் செலவுக்காக வெளிநபரிடமிருந்து ரூ. 1லட்சம் கடனாக வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காத நிலையில் ராமசாமி இறந்துவிட்டார். இதனால், அவரது மகன் ராஜகோபாலிடம்( விவசாயி) அந்த பணத்தை தருமாறு, தனபாப்பு (அத்தை) மற்றும் அவரது மகன் சத்தியமூர்த்தி ஆகியோர் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், 2017ம் ஆண்டு மே 23 ம் தேதி தனபாப்பு மற்றும் சத்தியமூர்த்தி இருவரும் ராமசாமி மகனிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே மீண்டும் ததராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜகோபால், 24ம் தேதி அதிகாலை தனது டிராக்டரில் தனபாப்பு வீட்டுக்குச் சென்று அவரையும், சத்திய மூர்த்தியையும் இரும்புக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் இருவரையும் சாலையில் இழுத்து வந்து போட்டு அவர்கள் மீது டிராக்டரை ஏற்றி விபத்தில் இருவரும் உயிரிழந்ததுபோல நாடகமாடி விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அத்தை மற்றும் அத்தை மகனை கொலை செய்த ராஜகோபாலை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ராஜகோபாலுக்கு கொலைக்குற்றத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுக்கு 7 ஆண்டுகள் மற்றும் குற்றத்தை மறைத்த குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்ததுடன் அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.13,000 அபராதம் விதித்தும் நீதிபதி பி.செல்வமுத்துக்குமாரி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கே.பி. சக்திவேல் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்