Rock Fort Times
Online News

30 வழக்குகளில் தொடர்புடையவர் துப்பாக்கி முனையில் கைது- மனைவி வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு….

கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சைலு என்கிற சைலேந்தர் (34). இவர் மீது சேலையூர், பீர்க்கன்காரணை, சங்கர் நகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, குன்றத்தூர், மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவரை தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சைலேந்தர் ராஜபாளையத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற தனிப்படை போலீசார் நேற்று ( 30.11.2023 ) நள்ளிரவு 1.30 மணியளவில் துப்பாக்கி முனையில் சைலேந்தரை கைது செய்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சைலேந்திரின் மனைவி பொன்மலர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நாங்கள் சென்னையை விட்டு வந்து 5 வருடங்கள் ஆகிறது.

ஒரு மகாசபை தலைவரின் சேம்பரில் வேலை செய்து வருகிறோம். தற்போது எனது கணவர் எந்த ஒரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த வழக்குக்காக அவரை போலீசார் அழைத்து சென்றார்கள் என்று தெரியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார், எங்களை வாழ விடுங்கள் என அந்த ஆடியோவில் பேசியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்