நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழப்பு : விடுதி உரிமையாளர்- பயிற்சியாளருக்கு 2 ஆண்டு சிறை…
திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு..
திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியில் ஒரு தனியார் சொகுசு விடுதி (ரிசார்ட்) அமைந்துள்ளது. இங்குள்ள நீச்சல் குளத்தில் கடந்த 2017- வது ஆண்டு மே 24-ம் தேதி மாலை திருச்சி மகாலட்சுமி நகர், தனரத்தினம் நகரைச் சேர்ந்த முகமது முஸ்தபா மகன் சையத் அபுதாகிர் (12) என்ற சிறுவன் அவரது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சையத் அபுதாகிர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், தீர்ப்பளிக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினாலும், பயிற்சியாளர் உரிய வகையில் பாதுகாப்புடன் பயிற்சியளிக்காததாலும் சிறுவன் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விடுதி உரிமையாளர் சீனிவாச நகரைச் சேர்ந்த ரா. சிவபாலகுமார் (46), நீச்சல் பயிற்சியாளர் பா. கணேசலிங்கம் (56) ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார்.
மேலும், உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எஸ். ஹேமந்த் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.