விமானத்தில் பறக்க வேண்டும் அதுவும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அவ்வாறு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா முக்கியம். தற்போது இதில் தளர்வுகள் செய்யப்பட்டு இனி இந்திய மக்கள் விசா இல்லாமல் மலேசியா வரலாம் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். அதன்படி, இனி இந்திய மக்கள் மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குவதற்கு விசா தேவையில்லை என மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தெரிவித்தார். இது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மலேசிய பிரதமர் அன்வார் நேற்று ( 26.11.2023 ) தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் ஓர் உரையின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விசா தேவையில்லை என்றாலும், மலேசியாவிற்கு வருகை தரும் இந்திய பிரஜைகளுக்கு பாதுகாப்பு சோதனை வழக்கம் போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், வரும் ஆண்டில் விசா வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை பிரதமர் இப்ராஹிம் முன்பு வெளிப்படுத்தியிருந்தார். விசா செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், நாட்டிற்குள் அவர்களின் செலவினங்களை அதிகரிக்கவும் முடியும். அதன்மூலம் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்புகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.