திருச்சி திருவெறும்பூர் அருகே வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது . இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதியில் கட்டாயமாக தங்கி படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளது.
இந்தப் பள்ளியில், கட்டணம் செலுத்தவில்லை என்றால் மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகம் வெளியில் நிறுத்தி வைப்பது, பள்ளியின் செயல்பாடு பிடிக்காமல் வேறு பள்ளிக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் நடப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் குண்டூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 12ம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். அவரை இந்தப் பள்ளியின் ஆசிரியர் வினோத் என்பவர் சக மாணவிகள் முன்பு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த, அந்த மாணவி அன்று இரவு அறையில் வைத்திருந்த 15 பாராசிட்டமல் உட்பட மேலும் சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்தும் வெளியில் தெரியாமல் மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியை அவரது பெற்றோர், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அந்த மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் ஆசிரியர் வினோத் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லம்மாள் பள்ளியில் பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.