Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் பெண்களை குறி வைத்து நகை பறிக்கும் கும்பல்…

புதுக்கோட்டை மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி (வயது 38) என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு அன்னதானப்பட்டி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால்  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்தது மட்டுமின்றி அவரை அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு  தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து வளநாடு  காவல் நிலையத்தில் ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில்  போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து குளித்தலை பேருந்தில் ஏற முயன்ற  மணப்பாறை ஆளிபட்டியை சேர்ந்த பழனியம்மாள் (77) கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் மணப்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுபோன்று கடந்த சில மாதங்களாகவே  திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் முதியவர்கள், தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை மர்ம கும்பல் பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் போலீசார் தனி கவனம் செலுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்