குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், மக்கள் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
அலட்சியமாக செயல்படும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் A2 என்ற தெருவில் முன்புறம் 10 குடும்பத்தினரும், அதன் பின்புறம் 10 குடும்பத்தினரும் என 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தத் தெருவின் முன்பகுதியில் மிகப்பெரிய, அதிக எடை கொண்ட வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் கொஞ்சம், கொஞ்சமாக சாய்ந்து வருகிறது. மரத்தின் அடிப்பகுதியில் எலிகள் அதிகளவு வசித்து வருவதால் அவைகள் பொந்துகள் அமைத்துள்ளன. இதனால், இந்த மரமானது மிகவும் பலவீனம் அடைந்து மேலும் சாய்ந்து வருகிறது. இதன் அருகில் தான், அருகருகே வீடுகள் அமைந்துள்ளன. மேலும், சிறுவர், சிறுமிகள் விபரீதம் தெரியாமல் இந்த மரத்தின் அருகே விளையாடி வருகின்றனர். இந்த மரத்தை வெட்டி அகற்றக்கோரி இம்முகாம் தனித் துணை ஆட்சியர், மாவட்ட வருவாய், மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு அந்தத் தெரு மக்கள் கொண்டு சென்றனர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்களே தவிர அதன்பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இம்மரம் இன்னும் சற்று கீழ் நோக்கி சாய்ந்து வருகிறது. இந்த மரம் மொத்தமாக சாய்ந்தால் மிகப்பெரிய அளவில் பொருள் சேதம், உயிர் சேதம் ஏற்படும்.
இதுதொடர்பாக முகாம் வாசி அம்முகாமின் தனித்துனை ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுத்தும், நேரில் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, மெத்தன போக்கை கடை பிடித்து வருகிறார். மரம் சாய்ந்தால் உயிர் சேதம் ஏற்படும் என்று தெரிந்தும் அஜாக்கிரதையாக இருந்து வருகிறார்கள். மரம் சாய்ந்து விபரீதம் ஏதும் நடந்தால் அதற்கு மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். மிகப்பெரிய விபரீதம் ஏதும் நடப்பதற்கு முன் இம்மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு சோகமாக நடிப்பார்களா? என்பதுதான் அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.