துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாத பிறப்பையொட்டி திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள காவிரி ஆற்றில் திரளான மக்கள் புனித நீராடினர். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலோடு கலக்கும் வரை காவிரி நதிக்கரையில் திருப்பராய்த்துறை, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய மூன்று இடங்கள் விசேஷ தீா்த்தங்கள் ஆகும். ஐப்பசி முதல் நாளான இன்று திருப்பராய்த்துறையிலும் கடைசி நாளில் மயிலாடுதுறையில் நீராடி அந்த தலங்களில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வழிபடுபவருக்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம் . இத்தகைய சிறப்புடைய துலா மாத பிறப்பை ஒட்டி திருப்பராய்த்துறையில் உள்ள பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காவிரியை சென்றடைந்தார் . அங்கு அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதன்பின் பக்தர்களுக்கு தாருகாவனேஸ்வரர் காட்சியளித்தார். துலா ஸ்நானம் எனப்படும் புண்ணிய நீராடுதல் திருவிழாவில் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் திருப்பராய்த்துறை காவிரி ஆற்றில் புனித நீராடினர். புண்ணிய நீராடுதல் பெருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.