புரட்டாசி முதல் சனிக்கிழமை: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்…
நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்..
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். கடந்த 18-ம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. இன்று ( 23.09.2023 ) புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும். இதனை முன்னிட்டு பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் காலை முதலே திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் மட்டும் பெருமாளை தரிசனம் செய்வதற்கான நேரம் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மூலவர் பெரிய பெருமாளை காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், மாலை 6-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதேபோன்று பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கராத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதியில் பக்தர்கள் அணையா விளக்கில் நெய் ஊற்றி வழிபாடு செய்யது வருகின்றனா். பாதுகாப்பு பணியில் ஸ்ரீரங்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.