தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் புத்தூர் பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் திருச்சி கல்லணை, கிளிக்கூடு, உத்தமர் சீலி, பனையபுரம், திருவளர்ச்சோலை வழியாக திருச்சி- சென்னை பைபாஸ் சாலையை வந்தடைந்து, அதன் பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் இதர மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கல்லணை, திருவளர்ச்சோலை பகுதிகளில் மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், சாலைகள் சேதம் அடைவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனை கண்டித்து திருவளர்ச்சோலை பகுதி பொதுமக்கள் அவ்வழியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மணல் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள், சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் திருச்சி- கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
