கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்…
தமிழ்நாடு அரசு தகவல்...
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 65 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். ஆனால், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று (18.9.23) முதல் அனுப்பி வைக்கப்படும் . இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதில் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு மேல்முறையீட்டு அலுவலராக செயல்படும் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை விசாரணை செய்வார். தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் . இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.