திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையிலும், ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையிலும் இன்று ( 30.08.2023 ) நடைபெற்றது. கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் அந்தந்த கட்சியின் முன்னுரிமை அடிப்படையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். கூட்டம் தொடங்கியவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் பிரபாகரன் எழுந்து இங்கே மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களை எதன் அடிப்படையில் அமர வைத்து உள்ளீர்கள். சாதி அடிப்படையில் என்னை பின் வரிசையில் அமர வைத்து உள்ளீர்களா?, இதற்கு மேயர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேசினார்.அப்போது தி.மு.க.கவுன்சிலர் காஜாமலை விஜய் உள்ளிட்ட சில திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று சாதி அடிப்படையில் பேசாதீர்கள். கண்ணியமாக பேசுங்கள் என்று கூச்சல் போட்டனர்.
மேயர் அன்பழகன் :- மாமன்ற கூட்டத்தில் இந்த மாதிரி பேசாதீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் அந்த கட்சியின் பலத்தை பொறுத்து இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
சுஜாதா (காங்): நான் இதற்கு முன்பு இதே மாமன்றத்தில் மேயராக பதவி வகித்துள்ளேன். கட்சியில் ஏ.சி.சி.உறுப்பினராக உள்ளேன். எனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. எனவே நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி மாமன்றத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்தார். ஜவஹர் (காங்) அவரை சமாதானப்படுத்தி முன் வரிசையில் அமர வைத்தார்.
செந்தில்நாதன் (அமமுக ): மாமன்றத்தில் கவுன்சிலர்கள் இருக்கையில் அமர்வது எதன் அடிப்படையில் ஒதுக்கினீர்கள் என்று விளக்க வேண்டும்.
மேயர்: இதற்கு நான் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். மாமன்ற கூட்டத்தின் போது,உறுப்பினர்கள் சிலர் கண்ணிய குறைவாக நடந்து கொண்டார்கள். இந்த சம்பவத்தில் கவுன்சிலர்கள் முத்து செல்வம், ராமதாஸ், செந்தில்நாதன் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் முத்துசெல்வம், செந்தில்நாதன் ஆகியோர் விளக்க கடிதம் கொடுத்து விட்டனர். அதனால் அவர்கள் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கிறேன். ஆனால் கவுன்சிலர் ராமதாஸ் இதுவரை விளக்க கடிதம் தரவில்லை. இந்த கூட்டத்தில் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் கூட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் .
ராம்தாஸ் (திமுக) : இரண்டு கவுன்சிலர்கள் கேட்ட விளக்கத்தை நானும் கேட்கிறேன்.
விஜயலட்சுமி கண்ணன் (திமுக):- தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி விருது பெற்றதற்கு தமிழக முதல்வர் மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேயர், கமிஷனர் அதிகாரிகளுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவஹர் (காங்):- ஸ்ரீரங்கத்தில் கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் திடீரென்று அறநிலையத்துறை நிர்வாகம் அங்குள்ள 350 ஏக்கர் இடமும் அறநிலையத்துறை உடையது என்று கூறுகிறது. இதனால் மாநகராட்சி சார்பில் வரிவசூல் செய்ய முடியவில்லை. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
மேயர்: இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்பிகாபதி (அதிமுக): – திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைய உள்ளது. ஏற்கனவே பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது . அங்கு பார்க், லாரி முனையம், விளையாட்டு மையம் ஆகியவை அமைய உள்ளது. எல்லா திட்டங்களும் மதுரை சாலையில் ஒரே இடத்தில் அமைந்தால் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை உண்டாக்க நேரிடும். பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த மார்க்கெட்டை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெக்ஸ் (காங்): கூட்டத்தில், 65 வார்டுகளிலும் உள்ள குறுக்கு சாலைகளுக்கு பெயர் பதாகைகள் வைக்கவும், மங்கிய மின் விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்கினை பொருத்தவும், விரைவில் இந்தாண்டிற்கான பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்.
பைஸ் அஹமது (ம.ம.க): 28வது வார்டு அண்ணா நகர் பகுதியில் பைப் லைன் உடைந்து வருகிறது. இதனை சரி செய்து தர வேண்டும். எனது வார்டில் தண்ணீர் பிரச்சனையால் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. இதனை தடுக்க மருத்துவ முகாம் நடத்த வேண்டும். நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது.
மேயர்: கடந்த ஆறு மாதத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து கருத்தடை செய்துள்ளோம். இந்த மாமன்றத்தில் கருத்தடை செய்யப்பட்ட நாய் குட்டி போட்டதாக தவறாக சொல்ல வேண்டாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.