கடந்த சில ஆண்டுகளாக 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், தற்போது சென்னையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆக உள்ளது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. அதன் விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில், விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்த விலை குறைப்பு இன்றிலிருந்து ( 30.08.2023 ) அமலுக்கு வருகிறது. அரச ‘உஜ்வாலா திட்டத்தின்கீழ், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் அடுத்தடுத்து வாங்கும் சிலிண்டர்களுக்கு ஏற்கனவே ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களைப் போல் அவர்களுக்கும் சிலிண்டர் விலை மேலும் ரூ.200 குறைக்கப்படுகிறது. எனவே, மானியத்துடன் சேர்த்து அவர்களுக்கு சிலிண்டர் விலை ரூ.400 குறையும். டெல்லியில் அவர்களுக்கு ஒரு சிலிண்டர் ரூ.703-க்கு விற்கப்படும். கூடுதலாக 75 லட்சம் உஜ்வாலா’ திட்ட கியாஸ் இணைப்புகளை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, ‘உஜ்வாலா’ திட்ட பயனாளிகள் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.