துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நாட்கள் கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 2 வது நிலநடுக்கம் 7.5 என்ற ரிக்டர் அளவிலும், 3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து ஏற்பட்டு நாட்டையே உருக்குலைய வைத்தது. துருக்கி மற்றும் சிரியாவில் நகரங்கள் கட்டிடங்கள் இடிந்தும், உருக்குலைந்த நிலையிலும் காணப்படுகின்றன. இடைப்பட்ட நாட்களிலும் பல முறை நிலநடுக்கம் துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்டு உள்ளன. மீட்புப் படையினர் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு குழுவினர் உதவியுடன் மீட்டனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில் 44,218 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சிரியாவில் 5,914 பேர் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.