Rock Fort Times
Online News

திருவெறும்பூரில் 8 பேரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை….

திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (வயது 34). கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஒரு வாரம் கழித்து கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலின் கரையில் தங்கதுரையின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் தங்கதுரை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தங்கதுரையின் செல்போனை கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான சப்பாணி (35) பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதுபோலவே, நகைக்காக தன் தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தை சேர்ந்த விஜய்விக்டர் (27), கூத்தப்பாரைச் சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) ஆகிய 7 பேரை கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். பின்னர் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இவ்வழக்கு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜரானார். இந்த வழக்கில் இன்று ( 07.08.2023 ) தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சப்பானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். சைக்கோ கொலைகாரன் சப்பானிக்கு வாழ்நாள் சிறைதண்டனை அளித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். சப்பானி மீது நான்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 364, 394 இரு பிரிவுகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு 201 பிரிவுக்கு 3 சிறை தண்டனையும், நான்காவது பிரிவான 302 வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு தீர்ப்பு அளித்துள்ளார்..

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்