Rock Fort Times
Online News

ஆந்திராவில் கலவரம் : தமிழக பேருந்துகள் வேலூர் திருப்பத்தூரில் நிறுத்தம்…

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்  சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது வன்முறை ஏற்பட்டதால் தமிழகத்திலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட  சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். அதன்படி, சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடுவின் வாகனத்தை தடுக்க முயன்றனர். அப்போது அங்கு குவிந்த தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் கற்கள், காலணி, மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டனர். வன்முறையை கட்டுப்படுத்த 2 கட்சியினர் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த அவர்கள், காவல்துறையின் இரண்டு
வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்ட இரு கட்சித் தொண்டர்களையும் போலீசார் விரட்டியடித்தனர்.
இதனால் தமிழகத்திலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. போக்குவரத்து முடங்கியதால் வார இறுதி நாள்களில் திருப்பதி செல்ல இருந்த பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். முழு அடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்