Rock Fort Times
Online News

சென்னையில் கன மழைக்கு 8 பேர் உயிரிழப்பு…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், இன்று ( 05.12.2023 )  காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கன மழைக்கு 8 பேர் உயிர் இழந்ததாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே இறந்து கிடந்த 70 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. எஸ்பிளனேடு ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பெசன்ட் நகரில் மரம் விழுந்து முருகன் என்பவர் உயிரிழந்தார். பட்டினம்பாக்கம் மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகே கிடந்த அடையாளம் தெரியாத 60 வயது பெண்ணின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம் பாண்டியன் நகரில் கணேசன் என்ற 70 வயது முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பரத் என்பவர் உயிரிழந்தார். சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரில், அங்கு பாதுகாவலராக பணியாற்றி வந்த செல்வம் சடலமாக கிடந்தார். கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளி நிவாரண முகாமில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மிராஜுல் இஸ்லாம் என்ற 19 வயது இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்