Rock Fort Times
Online News

கோவையில் 13 வீடுகளில் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை…* வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை துப்பாக்கியால் சுட்டுபிடித்த போலீசார்!

கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் ஆவர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்மநபர்கள் நுழைந்தனர். அவர்கள் அங்கு குடியிருப்பில் பூட்டி இருந்த வீடுகளை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதுவரை 13 வீடுகளில் இருந்து 56 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், வெள்ளி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார், துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 35 முதல் 40 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் கொள்ளையர்களை பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்