திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன்கள் சிவகுமார், சசிகுமார். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சிவகுமார் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். சசிகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சசிகுமார் மனைவி வீட்டை பூட்டி விட்டு உள்ளூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு நேற்று இரவு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(டிச.8) காலை வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 44 பவுன் தங்க நகைகளும், சிவகுமார் வீட்டில் 6 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மூலமும் துப்பு துவக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் துறையூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.