Rock Fort Times
Online News

சமயபுரத்துக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 4 பெண்கள் பலி..!

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். சிலர் பாதயாத்திரை ஆகவும் வருகை தருகின்றனர். அந்தவகையில் கடலூர் மாவட்டத்திலிருந்து பாத யாத்திரையாக சமயபுரத்திற்கு பக்தர்கள் குழுவினர் புறப்பட்டனர். அவர்கள் இன்று (ஜன.31) பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் கடலூர் தோழர் குடிக்காடு பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (35), விஜயலட்சுமி (40), சசிகலா (47) மற்றும் ஆத்தூர் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த சித்ரா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜோதிலட்சுமி (57) என்பவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காரை ஓட்டி வந்த கௌதம் (24) என்பவரை கைது செய்தனர். கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்