நான்கு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டு, இன்று புதிதாக பொறுப்பேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடியோ விவகாரத்தில் சிக்கிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டு தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகின. இந்த நிலையில் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் அல்லது இலாகா மாற்றம் செய்யப்படலாம் என்ற யூகங்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையின் 35 வது அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று ( 11.05.2023 ) காலை டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் நான்கு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை டி.ஆர்.பி. ராஜாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருக்கும் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ்மொழி வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.