கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ளது துணி சரமேடு. இங்குள்ள தனியார் பள்ளியில் பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். சில மாணவர்களை அழைத்துவர பள்ளி சார்பில் பஸ், வேன், போன்ற வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ( 26.10.2023 ) காலை பரங்கிப்பேட்டையில் இருந்து 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி மினிபஸ் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை டிரைவர் முருகன் ஓட்டினார். இந்த பள்ளி வாகனம் பி.முட்லூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. உடனே , அதிலிருந்த 30 மாணவர்களும் அவசர, அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் அந்த பள்ளி வாகனம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அந்த வாகனம் பெருமளவு சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.