பாஜகவில் இருந்து 30 பேர் எம்எல்ஏக்கள்; வி.பி. துரைசாமி அமைச்சர்…* நயினார் நாகேந்திரன் பேச்சால் சலசலப்பு…!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. குடும்ப ஆட்சியாக செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. 11 வந்தே பாரத் ரயில்கள், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். எங்களை பொறுத்தவரை, பாஜகவில் இருந்து 20 முதல் 30 பேர் சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏக்களாக நுழைவார்கள். வி.பி. துரைசாமி அமைச்சராவார்” என நயினார் நாகேந்திரன் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது, 30 பேர் வரை எம்எல்ஏக்களாக சட்டமன்றம் செல்வார்கள் என்றும், வி.பி. துரைசாமி அமைச்சர் ஆவார் எனவும் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.