Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் அருகே பொது இடத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட 3 வாலிபர்கள் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் சோழா அவன்யூ பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுமார் 15 பேர் மது அருந்தியும், சமுக விரோத செயல்களில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 10-30 மணி அளவில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் சத்தமாக பேசிக்கொண்டு கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தனர். இதனை தட்டிகேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்களை திட்டியதோடு அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடினர். அதில், 2 பேரை பொதுமக்கள் பிடித்து இரவு நேர ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள நலச்சங்கத்தினர், தப்பி ஓடியவர்கள் மூலம் தங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு இதுபோன்ற சம்பவம் தங்கள் பகுதியில் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையிலும், திருவெறும்பூர் உட்கோட்ட ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் அறிவுரையின் படியும் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட மலைக்கோயில் வஉசி தெருவை சேர்ந்த விஜய் மகன் சுதாகர் (19), ராஜ வீதியை சேர்ந்த சந்தோஷ் மகன் யுவராஜ் (21), பீர்முகமது மகன் சகாப்தின் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்