Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய கருவூல ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சே. நல்லையன். இவர் பணி முதிர்வின்போது தனது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க திருச்சி லால்குடி சார்ந்த கருவூலத்தில் விண்ணப்பித்தார். இதற்கு கருவூல கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ரூ. 500 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத நல்லையன் திருச்சி ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது கடந்த 2008 மார்ச் 15-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 நாட்கள் கழித்து லஞ்சப்பணம் ரூ.500-ஐ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று ( 13.07.2023 ) தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன், லஞ்சம் வாங்கிய லால்குடி சார் கருவூல முன்னாள் கணக்கர் கிருஷ்ணமூர்த்திக்கு லஞ்சம் கேட்டு பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்