ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 35 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் சென்னாராவ் என்பவர் தலைமையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை வேகமாக தட்டியுள்ளனர். இதனைப்பார்த்த கோவில் ஊழியர் விக்னேஷ், உண்டியலை தட்டாதீர்கள் என்று கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் கோவில் ஊழியர்களான பரத், செல்வா, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சென்னாராவை தாக்கியதில் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அதேபோல, ஐயப்ப பக்தர்கள் தாக்கியதில் கோவில் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஐயப்ப பக்தர்கள் காயத்ரி மண்டபத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல கோவில் ஊழியர்கள் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இருதரப்பு புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஐயப்ப பக்தரை தாக்கியதாக கோவில் பணியாளர்கள் விக்னேஷ் உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.