ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (35). மோட்டார் பொருத்திய தட்டு ரிக்க்ஷாவில் ஊர் ஊராக சென்று பழைய பேப்பர், பிளாஸ்டிக், பாட்டில் ஆகியவற்றை வாங்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவருடன் சிலம்பரசனின் மனைவி தங்கம்மாள் (35), மாரியம்மாள் (66), முருகன் என்பவரது மகன் சதீஷ் (7 )ஆகியோர் இன்று (26-05-2024) தூத்துக்குடி அருகே கீழசண்முகபுரம் பகுதிக்கு பழைய பொருட்கள் வாங்குவதற்காக சென்று இருந்தனர்.
சூரங்குடி அருகே நெடுஞ்சாலையை அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியே வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார் ஒன்று தட்டு ரிக்க்ஷா மீது மோதியது.இதில் தட்டு ரிக்க்ஷா தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் மாரியம்மாள், தங்கம்மாள், சதிஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சிலம்பரசன் மற்றும் காரில் வந்த குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), குமரிதங்கம் (49), காரை ஓட்டி வந்த ஜெனிட் (29) ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.