Rock Fort Times
Online News

சென்னையில் பீகாரைச் சேர்ந்த 3 பேர் கொலை: போலீசாரால் தேடப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு !

பீகார் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை, தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பவர் தனது மனைவி முனிதா குமார் (22), 2 வயது மகன் ஆகியோருடன் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இம்மாதம் 24ம் தேதி இவர்கள் மூவரும் பீகாரை சேர்ந்த நண்பர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட கவுரவ் குமாரின் உடல் அடையாறு பகுதியிலும், அவரது 2 வயது குழந்தையின் உடல் பக்கிங்காம் கால்வாயிலும் வீசப்பட்டிருந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. கவுரவ்வின் மனைவி முனிதாவின் உடலை போலீஸார் கடந்த 28ம் தேதி முதல் தேடி வந்தனர். அவரது உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசியதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு போலீஸார் தேடி வந்தனர். சுமார் 50 காவலர்கள், 25 மாநகராட்சி ஊழியர்கள் என முனிதாவின் உடலை தேடி வந்த நிலையில் இன்று(ஜன.30) அவரது உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்