Rock Fort Times
Online News

2-வது திருமணம் செய்து கொண்ட கணவர் : போலீஸ் நிலையத்தில் மனைவி தர்ணா..!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி ( வயது 23 ). இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(29). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ராஜசேகர், மனைவிக்கு தெரியாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசல் முன்பாக அமர்ந்து கணவன் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் , இல்லாத நிலையில் பெண் போலீசார் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து முசிறியில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோகிலா மற்றும் பிரியா போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசியை சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கலையரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்