Rock Fort Times
Online News

2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்- தொண்டர்களுக்கு விஜய் பரபரப்பு கடிதம்…!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இதை முன்னிட்டு தொண்டர்களுக்கு விஜய் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ளகடிதத்தில்,இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு. உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது மக்களரசியல் மட்டுமே, தொடரும். இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல்.இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் மக்களோடு சேர்ந்து உழைத்தால்தான் தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல் உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி 1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான் அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே. இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். வெற்றி நிச்சயம்! ” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்