தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு திருச்சி, தஞ்சை மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அன்னையை தரிசித்து செல்கின்றனர். தற்போது பூண்டி மாதா பேராலயத்தில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை எக்மோர் அடுத்த நேரு பார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்கிளின் (வயது23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19)ஆகிய 5 பேர் வந்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5 பேரும் எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் கலையரசன் மற்றும் கிஷோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற 3 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இதே போன்று தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Comments are closed.