திருச்சி, பஞ்சப்பூர் டைடல் பார்க் கட்டுமான பணிக்கு சென்ற 2 தொழிலாளர்கள் பலி… * மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது!
திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணியில் புதுக்கோட்டையை சேர்ந்த நந்தா என்கிற வெற்றிவேல்(21), திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரை சேர்ந்த மோகன்(38) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இன்று(09-04-2025) பணி காரணமாக ஒரே இருசக்கர வாகனத்தில் திருச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பஞ்சப்பூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நந்தா மற்றும் மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்ட நிலையில் அந்தக் காரை ஓட்டிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.