Rock Fort Times
Online News

பெண்ணிடம் கொள்ளை முயற்சி வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது !

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராணி (வயது 40). இவர் உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8-ந்தேதி மாலை வேலை முடிந்து புத்தூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையையொட்டி கல்லாங்காடு பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒருவர், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சென்று ராணி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார். மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் சங்கிலி பறிக்க முயற்சிப்பதை கண்டு ஹாரனை தொடர்ந்து ஒலிக்கவே, அவர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். அவர் காரில் விரட்டிச்சென்று, மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் தடுமாறி கீழே விழுந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து ஆளுக்கொரு திசையில் தப்பி ஓடிவிட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் தப்பி ஓடிய வாலிபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, அது திண்டுக்கல் மாவட்டத்தில் திருடப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து விஜய் (21), சங்கர் (23) என்பதும், இருவர் மீதும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அத்துடன், கடந்த 8-ந்தேதி ராணியிடம் சங்கிலியை பறிக்க முயன்றது அவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்