Rock Fort Times
Online News

வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து திருச்சியில் நாளை 11-ம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – வியாபாரிகள் திரண்டு வர பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அழைப்பு…!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றுமுதல் தற்போது வரை பல்வேறு குழப்பங்களுடன் இச் சட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றங்கள் வருகின்றன. ஆடிட்டிங் படித்த கணக்காளரும், கம்ப்யூட்டரும் இல்லாமல் ஜி.எஸ். டி.ஐ பராமரிக்க முடியாது என்பது ஜி.எஸ்.டி.யின் சாதனைகளில் ஒன்று. இச் சூழ்நிலையில் எவை எவற்றிற்கெல்லாம் வரி இல்லை, அல்லது குறைவாக இருக்கிறது என்பதை தேடித் தேடி வரி விதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

அந்தவகையில் தற்போது வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகையுடன் கூடுதலாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து செலுத்த வேண்டும் எனவும், இது 10.10.2024 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிகர்களில் 90 சதவீதம் பேர் வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் இவ் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வாடகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடுமையாக எதிர்கின்றது. வணிகர்களின் எதிர்ப்பு குரலுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க தவறியதால் பேரமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் நாளை (11-12-2024) புதன்கிழமை காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

அந்த வகையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு தலைமையில், திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச்செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. வாடகைக்கு ஜி.எஸ்.டி. என்று வணிகர்களை வாட்டி வதைக்கும் இவ் அறிவிப்பை திரும்ப பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட, மாநகர இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட இணைச்செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கிளைச்சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு வியாபாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்