Rock Fort Times
Online News

திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு…

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காஜி நிஷா. இவரது மகன் இத்தாலி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் நஜ்முநிஷா மாடி வீட்டிலும், காஜி நிஷா கீழ் வீட்டிலும் வசித்து வருகின்றனர். அருகில் உள்ள வீட்டில் அவரது மகள் பாத்திமாகனி கணவர் தமீம் அன்சாரியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் காஜிநிஷா நேற்று இரவு மகள் வீட்டுக்கு சென்று இருந்தார். இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டுப் போய் இருந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசில் காஜி நிஷா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணா்களும் வந்து மா்ம நபா்களின் கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் சுப்பிரமணி கூறுகையில், கக்கன் காலனியில் மதுபான கடை உள்ளதால் இரவு நேரங்களில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் மேம்பாலத்துக்கு கீழே உள்ள சர்வீஸ் சாலையை மது பிரியர்கள் அடைத்துக் கொண்டு மது அருந்துகிறார்கள். அங்கு 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுகிறது. இதனால் எந்த நேரமும் அந்த பகுதியில் கூட்டமாக உள்ளது. எங்கள் பகுதியில் இதுபோன்று திருட்டு நடந்ததில்லை. இங்கு மது அருந்த வந்த யாரோ சிலர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஆகவே, கக்கன் காலனியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என கூறினார். 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்