Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு குற்றச் சம்பவங்களை தடுக்க களமிறங்கியது 13 “கிரைம் டீம்”…!

அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை(15-04-2025) நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசிக்க ஏதுவாக திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்கள் இன்று ( 14.04.2025 ) நாளை (15.04.2025 )வரை வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். திடீரென மயங்கி விழுபவர்கள் மற்றும் உடல் உபாதை காரணமாக பிரச்சனை ஏற்படுபவர்களுக்கு உதவிடும் பொருட்டு இரண்டு இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி போன்றவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு ள்ளன. தேரோடும் வீதிகளில் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பழைமை வாய்ந்த மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் மீது பக்தர்கள் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்த பிரமுகர்கள் செய்யும் அன்னதானம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பரிசோதனை செய்ய ப்படுகிறது. குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 13 “கிரைம் டீம்” அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. வெடிப்பொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ட்ரோன் கேமரா மூலம் சமயபுரம் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதியில் இருந்து கழுகு பார்வை மூலம் கண்காணிக்கவும், 50 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் நின்று போலீசார் கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கு வரும் பெண்கள் அணிந்து வரும் நகைகளை பாதுகாக்கும் வண்ணமாக சேஃப்டி பின் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மத்திய மண்டலத்தில் இருந்து ஒரு காவல் கண்காணிப்பாளர், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 31 காவல் ஆய்வாளர்கள், 1263 போலீசார் மற்றும் 275 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்