10-வது தேர்ச்சி போதும், இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலிப் பணியிடங்கள்- தமிழிலும் தேர்வு எழுத வாய்ப்பு…!
இந்திய ரயில்வேயில் 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. குரூப் டி பிரிவில் பாயிண்ட்ஸ் மேன், டிராக் மிஷின் அசிஸ்டெண்ட், மெக்கானிக்கல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் வடக்கு ரயில்வேயில் 4,785 பணியிடங்கள், மேற்கு ரயில்வேயில் 4672, மத்திய ரயில்வேயில் 3244, தெற்கு ரயில்வேயில் 2694 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர மற்ற மாநிலங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தான விபரங்களும் வெளியாகியுள்ளது.இந்த காலியிடங்களுக்கு இன்று ( ஜனவரி 23ம் தேதி ) தொடங்கி பிப்ரவரி 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் மற்ற படித்தொகைகள் சேர்த்து சுமார் 25 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்வுகள் இரண்டு நிலையில் நடக்கிறது. முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு, அதனையடுத்து உடல் தகுதி தேர்வு நடைபெற இருக்கின்றது. இதைத்தொடர்ந்து ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வை தமிழிலும் எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான தகவல்களை www.rrbapply.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Comments are closed.