பெண் குழந்தைகளை காக்க 10 ஆயிரம் கிலோமீட்டர் சாகச பயணம்..!
திருச்சி வந்தடைந்த சிஆர்பிஎஃப் பெண் பைக்கர்களுக்கு உற்சாக வரவேற்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து ‘யஷஸ்வினி’ என்ற பிரத்யேக நாடு தழுவிய சாகச பைக் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 150 பெண் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து,வடக்குப் பகுதியினர் ஸ்ரீநகரில் இருந்தும், கிழக்கே ஷில்லாங்கில் இருந்தும், தெற்குப் பகுதியில் கன்னியாகுமரியில் இருந்தும் அக்டோபர் 5ம் தேதி இப்பேரணியை துவக்கினர். அதன்படி, இந்தியாவின் தென்பகுதியான கன்னியாகுமரியிலிருந்து கிளம்பிய சி.ஆர்.பி.எஃப். பெண் போலீசாரின் சாகச பயணம் இன்று ( 8-10-2023) திருச்சியை வந்தடைந்தது. திருச்சியின் அனைத்து ரோட்டரி சங்கங்களுடன் ஜோசப் கண்மருத்துவமனை இணைந்து திருச்சி வந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களை வரவேற்க்கும் நிகழ்ச்சியானது ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
சிட்டி போலீஸ் கமிஷனர் என்.காமினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்டம் 3000-ன் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், திருச்சியிலுள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் செயல் அதிகாரி சுபா பிரபு மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான ஏ.கே.எஸ்.திட்ட சேர்மன் ஸ்ரீனிவாசன், மாவட்ட திட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல செயலாளர் கேசவன் ஆகியோர் செய்திருந்தனர். சி.ஆர்.பி.எஃப். படையினரின் இந்த பைக் பயணம் 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 10,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க உள்ளது. மேலும், இந்த குழுக்கள் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சக்தியை பறைசாற்றும் இதர குழுக்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.