திருச்சி, திருவானைக்காவலில் துணிகரம்: ஓய்வு பெற்ற மின்வாரிய பெண் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகைகள், பணம் கொள்ளை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, திருவானைக்காவல் அருகே கும்பகோணத்தான் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மீனாட்சி. தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் கணேசன். கோவையில் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் ரவிச்சந்திரன். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் மீனாட்சி, வீட்டை பூட்டிவிட்டு கடந்த 27-ம் தேதி திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அவரது சகோதரர் ரவிச்சந்திரன் காலை 9 மணி அளவில் சகோதரி மீனாட்சி வீட்டுக்கு சென்ற போது அந்த வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து மீனாட்சிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் உடனே வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், 19 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் நள்ளிரவு 2 மணி அளவில் மூன்று பேர் கைலி அணிந்து கொண்டு சட்டை இல்லாமல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.