இந்தியாவின் எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் அதில் மூன்றில் ஒருவர் வாக்களிப்பது இல்லை. தேர்தலில் 70% வாக்குப்பதிவு என்றால் அதுவே அதிக பேர் வாக்களித்த தேர்தலாக கருதப்படுகிறது. வெறும் 10 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த எம்எல்ஏக்கள் பலர் உண்டு. ஒரு வேளை இன்னும் 15 பேர் கூடுதலாக வாக்களித்திருந்தால் முடிவே மாறி இருக்குமோ? என்ற சந்தேகம் பலருக்கும் எழும்.
வேலை, தொழில் என்று பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊரிலிருந்து புலம் பெயர்ந்திருக்கும் பலர், தேர்தல்களில் வாக்களிக்க முடிவதில்லை. அவர்கள் சென்று தங்கியிருக்கும் ஊர்களிலும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. வாக்குப்பதிவு குறைவதற்கு முதன்மையான காரணம் இதுதான். இதை சரிசெய்யும்விதமாக இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்து இருக்கும் பலரும், அங்கிருந்தே தங்கள் சொந்த தொகுதியில் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதற்காக இப்போது ரிமோட் வாக்குபதிவு இயந்திரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதற்காக மல்டி கான்ஸ்டிடியூன்சி ரிமோட்டிக் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் ஆர்பிஎம் எனப்படும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் பரிசோதனை முறையில் உருவாக்கி இருக்கிறது. இதன் செயல்பாடு குறித்து விளக்குவதற்காக 57 அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனவரி 16ம் தேதி அழைத்திருக்கிறது. அதன் செயல்பாட்டை பார்த்துவிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை ஜனவரி 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
புலம்பெயர்ந்து வாழ்வோர் மற்றும் தேர்தல் நாளில் சொந்த ஊர் திரும்பி வாக்களிக்க
முடியாதவர்கள் போன்றோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலமோ அல்லது அருகில் உள்ள தேர்தல் அலுவலகத்திலோ நான் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் இருந்தபடி சொந்த தொகுதியில் வாக்களிக்க விரும்புகிறேன் என்று பதிவு செய்துகொள்ளவேண்டும். அப்படி பதிவு செய்து கொள்பவர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்திறன் கொண்ட தனி வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தப்படும்.
ஒரே வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் 72 தொகுதிகளுக்கு வாக்களிக்க முடியும் என்பது இதன் சிறப்பு. இயந்திரத்தில் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டப்படாது. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஏற்றபடி அது மாறும். வழக்கமான சோதனை நடைமுறைகளை முடித்துவிட்டு, வாக்காளர் தனது வாக்கை செலுத்தலாம். ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குகள் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் சேமிக்கப்படும். ஒருவேளை இதை பயன்படுத்துவது என்ற முடிவு ஒருமித்து எடுக்கப்பட்டால், இந்த நடைமுறைக்கு ஏற்றபடி தேர்தல் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.