ஈரோடு வரை வந்தீங்களே… கரூருக்கு போக மாட்டீர்களா?* விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிய ஜனதா கட்சி தமிழ் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆகியோர் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று (டிச.18) நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலையில் இருந்தே தவெக தொண்டர்கள், மக்கள் பொதுக்கூட்ட இடத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஈரோடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “ஈரோடு வரைக்கு வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டிங்களா??…. இங்க இருக்க கரூருக்கு போகல.. ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறிங்க?… இது ரொம்ப ராங் ப்ரோ …ஏன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.